மேலும் புதிய படங்கள்சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் 5ம் தேதி இமயமலை செல்கிறார். இரண்டு வாரங்கள் அவர் அங்கு தங்கியிருப்பார்.
வழக்கமாக ஒரு படம் முடிந்தவுடன் ரஜினி இமயமலைக்கு போய் விட்டு வருவார். இந் நிலையில் இப்போது பி.வாசுவின் இயக்கத்தில் குசேலன் படத்தில் நடித்து வருகிறார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு மாதம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் 2வது கட்ட படப்பிடிப்பு நடந்தது.
இப்போது குசேலனின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள குட்டநாடு பகுதியில் நடந்து வருகிறது.
அங்கு நயன்தாரா, மம்தா மோகன்தாஸ் ஆகியோருடன் ரஜினிகாந்த் ஆடும் பாடல் காட்சி உள்ளிட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன.
வேம்ப நாடு ஏரி பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினி வந்துள்ளதை அறிந்து அங்கு ஏராளமான கூட்டம் கூடியதால் போலீஸ் பாதுகாப்புடன் சூட்டிங் நடக்கிறது.
ஆலப்புழாவில் ஒரு கடலோர தங்கும் விடுதியில் இருந்தவாறு நடித்து வருகிறார் ரஜினி. இந்த படப்பிடிப்பு வரும் 5ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து 5ம் தேதி மாலை ரஜினி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அங்கிருந்து அவர் ரிஷிகேஷ் பயணமாகிறார். அங்கு அவர் 15 நாட்கள் தங்கியிருப்பார் என ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.